Sunday, January 8, 2023

நம்மை யுத்தத்திற்கு பழக்குவிக்கிற தேவன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Kamal

Date:08.01.2023

சங்கீதம் 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

சங்கீதம் 18:34
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

சங்கீதம் 18:39
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.

இங்கே தாவீது இப்படியாய் சொல்லுகிறார் என் கைகளை போருக்கும், என் விரல்களை யுத்தத்திற்கும் பழக்குவிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று துதிக்கிறார். தாவீது யுத்த வீரன் அல்ல ஆனாலும் ஆடுகள் மேய்த்த தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக வேண்டும் என்பது தேவனுடைய தீர்மானம். எனவே அவரை யுத்த வீரனாக கர்த்தர் பழக்குவித்தார்.சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம் என்று சொல்லத்தக்க யுத்த புருஷனாக கர்த்தர் தாவீதை மாற்றினார்.

யுத்தம் என்று சொல்லும் பொழுது வெறும் ஆயுதங்களை வைத்து போரிடுவது மட்டும் அல்ல நாம் அனுதினமும் இன்றயகாலகட்டத்தில் ஆவிக்குரிய போர் புரிய வேண்டியதாய் இருக்கிறது ஏனெனில் பிசாசானவன் எவரை விழுங்கலாம் கெர்ச்சிக்கிற சிங்கம் போல வகை தேடி சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறான்.  ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று அப்போஸ்தலராகிய பவுல் சொல்லுகிறார். இன்றைக்கும் நம்மையும் யுத்தத்திற்கு பழக்குவிக்க தேவன் விரும்புகிறார்.

1. யுத்தத்திற்கு பழக்குவிக்கப்பட்ட யோசுவா 

யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

யோசுவா 6:2
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

யோசுவா 6:3
யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.

யோசுவா 6:4
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

யோசுவா 6:5
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.

யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பதாக அடைக்கப்பட்டு இருந்தது. ஒருவரும் வெளியே போக முடியாது, உள்ளே இருந்து ஒருவரும் வெளிவர முடியாது. யோசுவா இந்த யுத்தத்தைத் மேற்க்கொள்ள தேவன் தம்முடைய ஆலோசணையை வழங்கி பயிறுவிக்கிறார், எரிகோ கோட்டையை எவ்வாறு முற்றுகையிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியை சுமந்து கொண்டு எரிகோ நகரத்தை சுற்றி வர வேண்டும். ஓவ்வொரு நாள் ஒரு தரமாக ஆறுநாள் சுற்றி வர வேண்டும் ஏழாம் நாள் அவர்கள் எரிகோவை எழுதரம் சுற்றி வர வேண்டும். ஏழாம் நாளிலே ஏழு கொம்பு எக்காளங்களை பிடித்துக்கொண்டு இருக்கிற ஆசாரியர்கள் அவைகளால் நெடுந்தொனி இட வேண்டும். எக்காள சத்தத்தை கேட்கும் பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் ஆர்ப்பரிக்க வேண்டும் அப்பொழுது அலங்கம் இடிந்து விழும் நீங்கள் மேற்கொண்டு போகலாம் என்று தேவன் ஆலோசனை வழங்கினார். தேவன் சொன்னது போல யோசுவா செய்து எரிகோவை கைப்பற்றினார். 

இதேபோல நம் வாழ்க்கையிலும் எரிகோ அலங்கம் போல எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் சரி அந்த அலங்கம் இடிந்து விழ யோசுவாவுக்கு ஆலோசனை சொன்னது போல தேவன் உங்களுக்கும் சொல்லுவார். நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். தடைகள் உடைக்கிற தேவன் உங்களுக்கு முன்பதாக கடந்து போவார். தேவன் உங்களை பயிற்றுவித்து எல்லா தடைகளையும் உடைத்து நீங்கள் ஜெயம் பெற தேவன் உங்களை பழக்குவிப்பார். 

2. யுத்தத்திற்கு பழக்குவிக்கப்பட்ட கிதியோன் 

நியாயாதிபதிகள் 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

நியாயாதிபதிகள் 6:14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நியாயாதிபதிகள் 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

நியாயாதிபதிகள் 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

நியாயாதிபதிகள் 7:21
பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

ஏசாயா 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள். ஆகையால் கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார். கிதியோனை கொண்டு கர்த்தர் இஸ்ரவேலை ரட்சிக்கும்படியாக கர்த்தர் எழுப்புகிறார்.  கிதியோனை கர்த்தர் யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார். பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றும் உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ என்று திடப்படுத்துகிறார். கிதியோன் கர்த்தருடைய ஆலோசனையின்படி வெறும் 300 பேர்களை கொண்டு வெட்டுக்கிளிகள் போல் திரளாக உள்ள மீதியானியரை முறியடித்தார்.

ஆம் பிரியமானவர்களே நமக்கு வாழ்க்கையில் வருகிற பெரிய பெரிய போராட்டங்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை கிதியோனை யுத்தத்திற்கு பழகுவித்த தேவன் உங்களுக்கும் உங்கள் சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர ஆலோசனை அளிப்பார். இஸ்ரவேல் புத்திரருக்கு எப்படி கர்த்தர் கிதியோனை கொண்டு ஒரு ரட்சிப்பை வைத்து இருந்தாரோ அதேபோல உங்கள் பெரிய மலை போன்ற போராட்டங்களுக்கான தீர்வை கர்த்தர் உங்கள் கைகளில் வைத்து இருப்பார். உலகத்தில் இருக்கிறவனை பார்க்கிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர். போராடிகிறதுக்கு கர்த்தர் உங்களை புதிதும், கூர்மையான எந்திரமாக்குவார் நீங்கள் மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாகும்படியாய் செய்வார். 

3. யுத்தத்திற்கு பழக்குவிக்கப்பட்ட தாவீது 

II சாமுவேல் 5:19
பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.

II சாமுவேல் 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

II சாமுவேல் 5:23
தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

II சாமுவேல் 5:24
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

II சாமுவேல் 5:25
கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.

இங்கே பெலிஸ்தருக்கு விரோதமாய் போகலாமா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரிக்கிறார். அதற்கு கர்த்தர் நீ போ பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொல்லுகிறார். தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்தார். பின்னர் பெலிஸ்தர்கள் மறுபடியும் தாவீதுக்கு விரோதமாக  ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். இப்பொழுதும் தாவீது கர்த்தரிடத்தில் விசாரிக்கிறார் அதற்கு கர்த்தர் நீ நேராய் போகாமல் அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். இங்கே நாம் பார்க்கிற பொழுதும் தாவீது கர்த்தரிடத்தில் விசாரிக்கிறவராக இருந்தார். கர்த்தருடைய ஆலோசனையை கேட்கிறவராக இருந்தார். கர்த்தர் தாவீதுக்கு பெலிஸ்தரை மேற்க்கொள்ள தாவீதுக்கு பயிற்றுவித்தார். நாமும் நம்முடைய நெருக்கத்தின் மத்தியில் தாவீதை போல கர்த்தருடைய ஆலோசனையை நாடுவோம் என்று சொன்னால் தேவன் நமக்கும் நிச்சயமாய் நமக்கு ஜெயத்தை அளிப்பார்.

4. தேவ சித்தம் செய்ய பழக்குவிக்கப்பட்ட எரேமியா 

எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

எரேமியா 1:6
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.

எரேமியா 1:7
ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

எரேமியா 1:8
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

எரேமியா 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

கர்த்தர் வழி மாறி போன இஸ்ரவேலை கண்டித்து உணர்த்த கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை தெரிந்துகொண்டார். அவர் தாயின் கருவில் உருவாகும் முன்னே கர்த்தர் எரேமியாவை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக தெரிந்துகொண்டார். எரேமியா ஆண்டவரே நான் சிறு பிள்ளையாய் இருக்கிறேனே நான் பேச அறியேன் என்று சொல்லுகிறார். கர்த்தர் எரேமியாவிற்கு திட்டமாய் நீ தான் பேச வேண்டும் நான் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக என்று ஆலோசனை கொடுக்கிறார் மேலும் நீ பயப்படவேண்டாம் உன்னை காக்கும்படிக்கு உன்னுடனே இருக்கிறேன் என்று சொல்லி நெருப்புதழலால் எரேமியாவின் நாவை தொட்டார். ரேமியா பாவங்களை கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். யாக்கோபின் பாவங்களை எடுத்துச் சொல்லுவதற்கு எரேமியா கர்த்தருடைய நாமத்தினால் அனுப்பப்பட்டவர். எரேமியா அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொல்லி, அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரும் என்று எச்சரித்தார். நாமும் உலகத்திற்கு ஒளியாக இருக்க தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பிசாசின் பிடியில் பாவத்தில் உழன்று கிடக்கும் இந்த உலகத்தில் ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். எரேமியாவை கர்த்தர் எப்படி பழக்குவித்து பயன்படுத்தினாரோ அதேபோல் நம்மையும் தேவன் பயன்படுத்துவார். 

5. ஆவிக்குரிய யுத்தத்தில் சோதனைக்காரனை வென்ற இயேசு 

மத்தேயு 4:1
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

மத்தேயு 4:3
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:5
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

மத்தேயு 4:6
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:7
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:8
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

மத்தேயு 4:9
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவரால் வனாந்திரத்திற்கு கொண்டுபோகப்பட்டார். இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தான் பின்பு அவருக்கு பசி உண்டாயிற்று அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து நீ தேவனுடைய குமாரனே ஆனால் இந்த கல்லுகள் அப்பமாகும்படி கட்டளையிடும் என்று சொன்னார் அதற்கு இயேசு மனுஷன் அப்பதினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்தையினாலும் பிழைப்பான் என்று எழுதி இருக்கிறதே என்றார். பிசாசு அவரை தேவாலயத்தின் உப்பரிகையிலே நிறுத்தி தாழ குதியும் அப்பொழுது தூதர்கள் கால்கள் கல்லில் இடராதபடி தங்கள் கைகளில் ஏந்தி கொண்டு போவார்கள் என்று எழுதி இருக்கிறதே என்று சொன்னான் அதற்கு இயேசு உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதி இருக்கிறதே என்று சொன்னார். பின்னர் மறுபடியும் பிசாசு இயேசுவிடம் வந்து உலகத்தின் சகல ராஜ்யங்களின் மகிமையும் அவருக்கு காண்பித்து நீர் என்னை சாஷ்டாங்கமாக பணிந்து கொண்டால் உமக்கு இதை தருவேன் என்றது அதற்கு இயேசு அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதி இருக்கிறதே என்கிறார் பிசாசு அவரை விட்டு ஓடிப்போனான். தேவனுடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படக்கூடாது என்று பிசாசின் திட்டத்தை இயேசு முறியடித்தார். இந்த ஆவிக்குரிய யுத்தத்தில் பிதாவினால் பழக்குவிக்கப்பட்டு இயேசு தம்மையே சிலுவையில் ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து சாத்தானின் தலையை நசுக்கினார். ஆண்டவருடைய பிள்ளைகளாக இருக்கிற நம்மையும் சோதிக்கும்படி பிசாசானவன் பல்வேறு சோதனைகளை கொண்டு வருவான அதனை எல்லாம்  மேற்கொள் ஆவியானவர் நமக்கு ஆலோசனை கொடுப்பார். ஜெயம் பெற வைப்பார். 



Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment