Monday, January 16, 2023

இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Johnson Israel 

Date: 15.01.2023

நாகூம் 1:12
உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

நம்முடைய வாழ்க்கையிலே அநேக சிறுமைகள் ஏன் வருகிறது என்று சொன்னால் நம்மை ஆசீர்வதிக்கவே தேவன் அவற்றை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். நம்முடைய அநேக தேவ தாசர்கள் அப்படிப்பட்ட சிறுமையை கடந்து வந்தவர்களாக இருக்கிறதை நாம் பார்க்கிறோம். இன்றைக்கும் கூட வேதாகமத்தில் இருந்து மூன்று நபர்களை குறித்தும் நாம் இங்கே காணலாம். 

1. சிறுமையை நீக்கி பலுகப் பண்ணுவார் 

ஆதியாகமம் 41:52
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.

கர்த்தர் யோசேப்பின் வாழ்க்கையிலே சிறுமையை அனுமதித்தார் என்றால் அவரை உயர்த்தி ஆசீர்வதிக்கத்தான். யோசேப்பை கர்த்தர் சிறுமைப்பட்ட தேசத்திலே பலுக பண்ணினார். நம்மையும் தேவன் இந்த ஆண்டு பலுக பண்ணுவார். யோசேப்பை கர்த்தர் பலுக பண்ணினார் ஏன் என்றால் யோசேப்புக்கு விவேகம் இருந்தது, ஞானம் இருந்தது, சகிப்பு தன்மை இருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் சில சிறுமைகள் வரும் பொழுது நமக்குள்ளும் சகிப்புத்தன்மை இருக்கும் என்று சொன்னால் தேவன் நிச்சயமாகவே நம்மை பலுக பண்ணுவார். 

2. சிறுமையை நீக்கி கொம்பை உயர்த்துவார் 

I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

I சாமுவேல் 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

அன்னாளுக்கு பிள்ளை இல்லாத காரணத்தினால் பெனின்னாள் அவளை சிறுமைப்படுத்தி கொண்டே இருந்தாள். அன்னாள் தேவ சமூகத்தில் எனக்கு ஆண் பிள்ளையை கொடுத்தால் அவனை உமக்கென்று ஒப்புக்கொடுக்கிறேன் என்று பொருத்தனை செய்து விண்ணப்பம் செய்கிறாள். கர்த்த அன்னாளின்  சிறுமையை கண்ணோக்கி பார்த்து ஆசீர்வதித்து கொம்பை உயர்த்துகிறார். நாமும் அன்னாளை போல கர்த்தரிடத்தில் பொருத்தனை செய்து ஒப்பு கொடுத்து ஜெபிப்போம் என்று சொன்னால் தேவன் நிச்சயம் ஏற்ற காலத்தில் நம் சிறுமையை கண்ணோக்கி பார்த்து நம்மை அதில் இருந்து விடுவித்து நம் சஞ்சலத்தை அகற்றி நம் இருதயத்தை களிகூறச்செய்து நம் கொம்பை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.  

3. சிறுமையை நீக்கி மகிழ்ச்சியாக்குவார்  

சங்கீதம் 90:15
தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

I சாமுவேல் 25:11
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.

I சாமுவேல் 25:14
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.

I சாமுவேல் 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

I சாமுவேல் 25:19
தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

I சாமுவேல் 25:33
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

I சாமுவேல் 25:34
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

I சாமுவேல் 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலுக்குத் தயவு காட்டியிருக்கிறார்கள். அவனுடைய செம்மறியாடுகளைப் பாதுகாக்க உதவி செய்திருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு ஒரு உதவி செய்யும்படி கேட்டு தாவீது தன்னுடைய ஆட்களில் சிலரை நாபாலிடம் அனுப்புகிறார். நாபால் அவர்களிடம் தாவீதை பற்றி கடுமையாக பேசி அனுப்புகிறார். இதை தாவீதின் வாலிபர்கள் அவருக்கு அறிவித்தார்கள் அதே நேரத்தில் நாபால் பேசிய இழிவான வார்த்தைகளைக் கேட்ட நாபாலின் ஆட்களில் ஒருவன், நடந்ததை அபிகாயிலிடம் சொல்கிறான். உடனடியாக அபிகாயில் சில உணவுப் பண்டங்களைத் தயார் செய்து, அவற்றை சில கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறாள். அபிகாயில் தாவீதை வணங்கி நான் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி நடந்த காரியங்களுக்காக மன்னிப்பு கேட்டாள். அதற்கு தாவீது அபிகாயிலிடம் உன் யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக நான் நாபாலை கொன்று போடாதபடி உன் யோசனை என்னை தடை செய்தது நீ சமாதானத்தோடே போ என்று சொல்லி அனுப்புகிறார். நீங்கள் எங்கெல்லாம் சிறுமை பட்டீர்களோ கர்த்தர் அங்கு உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். கர்த்தர் உங்களை சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், துன்பத்தை கண்ட வருஷத்துக்கும் சரியாக உங்களை மகிழ்ச்சியாக்குவார்.




Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment