Sunday, July 17, 2022

பாழான நிலத்திலும் வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்

 

Kanmalai Christian Church

Word of God: Brother D.Kamal

Date:17.07.2022

உபாகமம் 32:10

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.

நம் தேவன் பாழான நிலத்திலும் வெறுமையான அவாந்திர வெளியிலும் இருந்த நம்மை கண்டு எடுத்து இதுநாள் வரையிலும் நம்மை நடத்தி, நம்மை உணர்த்தி கண்ணின் மணியை போல காத்தருளினார். நம் தேவன் பாழானதை கட்டுகிற தேவன், நம் தேவன் பாழானதை புதிப்பித்து உயிர்ப்பிக்கிற தேவன், நம் தேவன் பாழானதை பயிர் நிலமாய் மாற்றுகிற தேவன் இன்றைக்கு ஒரு ஐந்து விதமான பாழான காரியங்களை எப்படி மாற்றுகிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே தியானிக்கலாம். 

1. பாழான ஆலயத்தை புதுப்பிக்கிறார் 

எஸ்றா 9:9

நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார்.

இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தில் இருக்கும்பொழுது கூட கர்த்தர் எங்களை மறக்காமல், கைவிடாமல் பாலான ஆலயத்தை புதுப்பிக்கும்படியாக பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார் என்று நன்றியுள்ள இருதயத்தோடு கூறுகிறார். நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். உலக சிற்றின்பங்களினால் நம் சரீரமாகிய ஆலயம் பாழாய் கிடக்கிறது. இருந்தாலும் கர்த்தர் உங்களை வெறுத்து விடவில்லை, உங்களை கைவிடவும் இல்லை நம்முடைய ஆலயத்தை தேவன் இன்றைக்கு எடுப்பித்து புதுப்பிக்க விரும்புகிறார். தம்முடைய விலையேறப்பெற்ற புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினால் நம்மை சுத்திகரித்து புதுப்பிக்கிறார். அன்றைக்கு நெகேமியாவுக்கு கர்த்தர் ராஜாக்களுக்கு முன்பாக ஆலயத்தை கட்ட தயை செய்ததை போல இன்றைக்கு நம்முடைய தேவன் நம் உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்பட தயை செய்வார்.  

2. பாழான  ஸ்தலங்களில் தம் பாதங்களை எழுந்தருளப்பண்ணுவார் 

சங்கீதம் 74:3

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.

சங்கீதம் 12:5

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

நம்முடைய வாழ்க்கையின் எல்லைகளில் இருக்கிற ஸ்தலங்களை சத்துருவானவன் நெடுங்காலமாய் பாழாய் கிடைக்கச்செய்து நெருக்குகிறான். இன்றைக்கு நெடுங்காலமாய் பாழாய் போன ஸ்தலங்களில் கர்த்தர் தம்முடைய பாதங்களை வைத்து எழுந்தருளப்போகிறார். கர்த்தர் நம்முடைய பெருமூச்சை கேட்டு நம்முடைய ஸ்தலங்களுக்கு விரோதமாய் சீறுகிறவர்களுக்கு விலக்கி காத்து நம்மை சுகமாய் இருக்கப்பண்ணுவார். கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்து அதின் பாழான ஸ்தலங்களை தேறுதல் அடையும்படி செய்வார். அப்பொழுது அதின் வானாந்திரம் ஏதேன் தோட்டத்தை போலவும், அதின் அவாந்திரவெளி கர்த்தருடைய தோட்டத்தை போலவும் இருக்கும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் நமக்கு உண்டாகி இருக்கும்படியாக செய்வார். 

3. பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார் 

சங்கீதம் 91:3

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

சங்கீதம் 91:6

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

கொள்ளை நோய்கள் பெருகி இருக்கிற இந்த காலத்திலும் அவைகள் நம்மை பாழாக்காமல் கர்த்தர் இது நாள் வரையிலும் ஜீவனோடு காத்து வருகிறார். ஏன் என்றால் அவரையே நாம் அடைக்கலமாய் கொண்டபடியினாலே, அவரையே நாம் நம்பி இருக்கிறபடியினாலே அவர் நம்மை தம் செட்டைகளின் மறைவில் மூடி பாதுகாக்கிறார். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. கர்த்தருடைய இரத்தம் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எந்த பாழாக்கும் கொள்ளை நோய்களும் உங்களை அணுகுவது இல்லை. அவர் தமது இரத்தக்கோட்டையில் நம்மை மூடி மறைத்து கொள்வார். 

4. பாழானதை பயிர்நிலமாக மாறச்செய்வார் 

எசேக்கியேல் 36:34

பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

எசேக்கியேல் 36:35

பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

எசேக்கியேல் 36:36

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

நம் வாழ்க்கை எந்த ஒரு ஆசீர்வாதமும் இல்லாமல் பாழாய் போன தேசமாய் இருக்கிறது.  அதை கடந்து போகிற யாவருக்கும் அது பாழாய் போனதாய் காட்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட நம் சூழ்நிலையை கர்த்தர் மாற்ற போகிறார். நம்மை கடந்து போகிற யாவருக்கும் கர்த்தருடைய ஆசீர்வாதமான கிரியைகளை தங்கள் கண்களால் காண்பார்கள். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் நிர்மூலமான எல்லை கட்டியெழுப்பி அதை பயிர் நிலமாக மாறபண்ணப்போகிறார் 

5. பிரிந்திருக்கிற, ராஜ்யமும் வீடும் பாழாகும் - நாம் ஒன்றாய் இணைந்து பலவானை காட்டி அவனை கொள்ளையிடவேண்டும். 

மத்தேயு 12:25

இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

மத்தேயு 12:28

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

மத்தேயு 12:29

அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

இயேசுவிடம் பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் கொண்டுவரப்பட்டான். அவர் அவனை குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக சொஸ்தமாக்கினார். இதை கண்ட ஜனங்கள் தாவீதின் குமரன் இவர் தானோ என்று ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் பரிசேயர்களோ அவர்  பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினார் என்றார்கள். இயேசு அவர்களின் சிந்தைகளை அறிந்து தனக்குத்தானே பிரிந்து இருக்கிற எந்த இராஜ்ஜியமும் பாழாய் போகும். சாத்தானை சாத்தானே துரத்தினால் அது தனக்கு விரோதமாக தானே பிரிவினை செய்ததாக இருக்கும். ஒரு தேசத்திற்குள்ளோ அல்லது ஒரு குடும்பத்திற்குள்ளோ பிரிவினை வந்தால் அந்த தேசமும், குடும்பமும் பாழாய் போகும். இந்த நிலை அவர்களுடைய பொதுவான சத்துரு அவர்களை ஜெயிக்க வழிவகுக்கும். இன்றைக்கு சபைகளிலும் இப்படிப்பட்டதான பிரிவினைகள் காணப்படுகின்றன. நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே அவயங்களாய் இருக்கிறோம். நமக்குள்ளே பிரிவினை இருந்தால் அது நம் எதிரிராளியான பிசாசு நம்மை மேற்க்கொள்ள வழி வகுக்கும். எனவே நாம் எதற்காக அழைக்கப்பட்டோம் என்ற நோக்கத்தை அறிந்து நாம் தேவனுடைய பிள்ளைகளாய் ஒன்றிணைந்து செய்யப்பட்டால் தான் இந்த உலகத்தின் பலவனாகிய அவனுடையதை நாம் கொள்ளையிடமுடியும் என்பதை உணர்ந்தவர்களாக நாம் செயல்படுவோம். ஜெயம் எடுப்போம் ஆமென். 






Kanmalai Christian Church

Bother Micheal

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment