Monday, March 22, 2021

மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்

 

Kanmalai Christian Church 

Word of God : Brother Kamal

Date: 22.03.2021


எரேமியா 31:4
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

எரேமியா 31:5
மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள்.

இன்றைக்கு தேவன் உங்களை மறுபடியும் உங்கள் வாழ்க்கையை கட்டப்போகிறார். ஒரு காலத்தில் நாம் நன்றாக இருந்து இருப்போம், ஒரு உயர்வான நிலையிலே இருந்து இருப்போம் அது உங்களுடைய தொழிலாக இருக்கலாம், குடும்பமாக இருக்கலாம், ஆவிக்குரிய வாழ்க்கையாக இருக்கலாம், எந்த சூழ்நிலையானாலும் சரி எதோ ஒரு குறிப்பிட்ட காலங்களில் எதோ ஒரு வீழ்ச்சியை சந்தித்து போராட்டங்களை கடந்து வந்து எல்லாம் இடிந்து போன நிலையில் இருக்கிற ஒரு அனுபவம் அப்படிப்பட்ட பாதையில் நாம் இருப்போம் என்று சொன்னால் தேவன் நமக்கு சொல்லுகிறதாவது நான் உன்னை மறுபடியும் கட்டுவேன் என்பதாகும்.மறுபடியும் உங்களை பழைய நிலைக்கு கொண்டுவரப்போகிறார்.மறுபடியும் ஒரு உயர்வான நிலைக்கு உங்களை நம் தேவன் கொண்டு வரப்போகிறார். 

வேதத்திலும் தேவன் அவருடைய தாசனாகிய யோபுவின் வாழ்க்கையை எப்படி கட்டுகிறார் என்பதை நாம் இங்கே காண்போம் 

1. குடும்ப உறவுகளை கட்டுவார் 

யோபு 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

யோபு 42:11
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

யோபு கிழக்கத்தி புத்திரர் எல்லாரிலும் பெரியவராய் இருந்தார். நல்ல செல்வாக்கு படைத்தவராக இருந்தார். அநேக ஆஸ்திக்கு சொந்தக்காரராக இருந்தார். அவரிடத்தில் அநேக வேலைக்காரர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கையில் சடுதியில் ஒரு புயல் வீசி அனைத்தையும் இழந்தார். இந்த நிலையில் யோபு இருக்கும் பொழுது அவருடைய சகோதர, சகோதரிகள் அவருக்கு அறிமுகமான எல்லாரும் அவரை விட்டு விலகிப்போனார்கள். 

யோபு 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.

யோபு 19:14
என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.

யோபு 19:15
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.

யோபு 19:16
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

யோபு 19:17
என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.

யோபு 19:18
சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.

ஒரு மனிதர் நல்ல நிலையில் இருந்து தாழ்ச்சி அடையும் பொழுது முதலில் அவரோடு இருந்தவர்கள் விலகிப்போய்விடுவார்கள். ஆஸ்தியும், ஐஸ்வரியமும், செல்வாக்கும் பதவியும் இருக்கும் பொழுது நம்மை சுற்றிலும் ஒரு கூட்டம் தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆனால் தாழ்வில் இருக்கும் பொழுது ஒருவரும் கூட ஆறுதலாய் இருக்க மாட்டார்கள். இங்கே அதுபோலத்தான் யோபு செல்வாக்கில் இருக்கும் பொழுது அநேகர் இருந்தார்கள். அவர் எல்லாவற்றையும் இழந்த நேரத்தில் அவரைவிட்டு விலகிப்போய்விட்டார்கள். 

யோபு தன் வாழ்க்கையில் இழப்பை சந்தித்த நேரத்திலே தன் சொந்த குடும்ப ஜனங்கள், நண்பர்கள், மனைவி, சிறுபிள்ளைகள், வேலைக்காரர்கள், பிராணசிநேகிதர்கள் கூட அவரை அறவே வெறுத்தார்கள் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம். இந்த நிலைமையில் இருந்த யோபுவின் வாழ்க்கையை தேவன் மீண்டுமாய் கட்டினார். அவரை விட்டு விலகிப்போன உறவுகள் எல்லாம் மீண்டும் ஒரு நாளிலே தேவன் இணைத்தார். அதேபோல் ஒருகாலத்தில் நமோடு இருந்தவர்கள், நம்மைவிட்டு தூரமாய்  போய் இருக்கலாம். தேவன் இப்பொழுது உங்களை உயர்த்துகிற காலம் இனி வெகு தொலைவில் இல்லை. சோர்ந்து போக வேண்டாம். உங்களை பிரிந்த உறவுகள் தேடிவரப்போகிறார்கள். தேவன் உங்கள் குடும்ப உறவுகளை மறுபடியும் கட்டப்போகிறார். தேவன் உங்கள் தலையை உயர்த்தும்பொழுது அவர்கள் மீண்டுமாய் உங்களிடத்தில் வருவார்கள். 

2. இழந்த பொருளாதாரத்தை மீதும் கட்டுவார் 

யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

யோபு 1:13
பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,

யோபு 1:14
சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:15
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:16
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:17
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

மிகுந்த ஆஸ்தியுள்ளவராக இருந்த யோபுவின் வாழ்க்கையில் சடுதியில் அனைத்தையும் இழக்கிறார். வாழ்க்கையே இடிந்து போன ஒரு நிலைமை, அனால் தேவன் யோபுவை கைவிடவில்லை ஏற்ற வேளையில் அவரை உயர்த்தினார். அவர் இழந்த பொருளாதாரம் அனைத்தையும் மீண்டுமாய் கட்டி எழுப்பினார்.  யோபின் முன் இருந்த நிலையை பார்க்கிலும், பின்னிலைமையை தேவன் இரு மடங்காக ஆசீர்வதித்தார். அதேபோல உங்கள் பொருளாதாரத்தையும் தேவன் கட்டி எழுப்ப வல்லவராய் இருக்கிறார். நீங்கள் இழந்த எல்லாவற்றையும் இரண்டத்தனையாய் திருப்பி அளிப்பார்.  

3. குடும்ப வாழ்வை மறுபடியும் கட்டி எழுப்புவார் 

யோபு 42:13
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

யோபு 42:14
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.

யோபு 42:15
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

யோபு 1:18
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,

யோபு 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

யோபு 1:21
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

மூன்றாவதாக தேவன் யோபுவின் குடும்ப வாழ்க்கையை கட்டுகிறார். பிள்ளைகள் எல்லாரும் மறித்து வாழக்கை இடிந்து போன அனுபவத்தை யோபு கடந்து வருகிறார். தேவன் மீண்டுமாய் அவருக்கு குமாரர், குமாரிதிகளை அருளி ஆசீர்வதித்தார். மறுபடியும் அவருடைய குடும்ப வாழ்க்கையை கர்த்தர் கட்டினார். இன்றைக்கு அநேகம் குடும்பங்களில் அன்பு, சமாதானம், ஐக்கியம் இல்லாமல் இடிந்து கிடக்கிறது. கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே உள்ள உறவுகள் பிரிந்து உடைந்து காணப்படுகிறது. குடும்பமே பிரிவினைகளால் இடிந்து கிடக்கிறது. கலங்க வேண்டாம் தேவன் மீண்டும் உங்கள் குடும்பங்களை கட்டி எழுப்புவார். குடும்பத்தில் என்றைக்கும் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் படியாக நம் தேவன் கட்டுவர். யோபுவின் குடும்பத்தை கட்டி எழுப்பின தேவன் உங்கள் குடும்ப வாழ்க்கையையும் கட்டுவார். 

4. இழந்த சரீர ஆரோக்கியத்தை மீண்டும் கட்டுவார் 

யோபு 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

யோபு 42:17
யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.

யோபு 19:20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

பிசாசானவன் யோபுவை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாதிக்க தொடங்கினான். எலும்பும் தோலுமாக மாமிசம் ஒட்டி கொண்டு இருக்கிறது, பற்களை மூட மாத்திரம் கொஞ்சம் தோல் இருந்தது என்று நாம் இங்கே வாசிக்கிறோம். ஆனாலும் தேவன் யோபுவின் சரீர ஆரோக்கியத்தை மீண்டும் கட்டி எழுப்பினார். அவர் நூற்று நாற்பது வருஷம் உயிரோடு இருந்து நான்கு தலைமுறைகளை கண்டு பூரண வயதுள்ளவராய் மரித்தார். இன்றைக்கும் கூட உங்கள் ஆரோக்கியம் இழந்து இருந்தால் பயப்படவேண்டாம் தேவன் உங்கள் இழந்த ஆரோக்யத்தைய மீண்டும் உங்களுக்கு திரும்ப அளிப்பார். நீங்கள் எந்த நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி தேவன் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் கட்டுவார் உங்கள் ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவார். 





For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment