Monday, June 27, 2022

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 26.06.2022

யாத்திராகமம் 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

I கொரிந்தியர் 12:6
கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

ஒரு வித்தியாசம் நம் வாழ்க்கையிலே, ஆவிக்குரிய வாழ்க்கையிலே கண்டிப்பாக ஒரு வித்தியாசம்  உண்டாகி இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். கிறிஸ்துவ வாழ்க்கை என்பதே ஆசீர்வதிப்பட்ட வாழ்க்கை, இப்படிப்பட்ட மார்க்கத்தில் இருக்கிற நம்முடைய வித்தியாசமாக தான் இருக்க வேண்டும்.  தேவன் எப்படி வித்தியாசம் உண்டாகும் படி செய்கிறார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் காணலாம். 

1. ஆசீர்வதிக்கிறதிலே ஒரு வித்தியாசம் - உன் சம்பாத்தியம் விருத்தியடையும் 

ஆதியாகமம் 30:30 - 43

ஆதியாகமம் 30:41
பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

ஆதியாகமம் 30:42
பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

ஆதியாகமம் 30:43
இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்று யாக்கோபு லாபானிடம் சொல்லுகிறார். லாபான் அதற்கு நான் என்ன தர விடும் என்று கேட்கிறார். நீர் எனக்கு எதுவும் தர வேண்டாம் நாள் சொல்லுகிற படி செய்தால் போதும் உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன் என்று சொன்னார். நான் உம்முடைய மந்தையை பார்வையிட்டு அதிலே அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அதுவே இனி எனக்கு சம்பளமாய் இருக்கட்டும் என்றார்  

ஆனால் லாபான் தன் மந்தையில் உள்ள ஆடுகளை யாக்கோபினிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்பாக தன்னிடம் இருக்கும் தன் குமாரனிடத்தில் கொடுத்து அதை தனியாக வேறுபிரித்து விடுகிறார். லாபான் தனக்கும், யாக்கோபுக்கு மூன்று நாள் பிராயண தூர இடைவெளியில் அந்த ஆடுகளை வைக்கிறார். யாக்கோபு முன்பதாகவே கருப்பு நிற ஆடுகளையும், புள்ளியும் வரியுமான ஆடுகளை தனியாக பிரித்து விட்டதினால் யாக்கோபு மேய்க்கிற ஆடுகளோ கொஞ்சம் அதுவும் ஒரே நிறமுள்ளதாய் இருக்கிறது அவைகள் பொலியும் பொழுது ஒரே நிற குட்டிகள் தான் போட முடியும். 

ஆனால் தேவன் யாக்கோபை ஆசீர்வதிக்க சித்தம் கொண்டு இருந்தார். பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலியும். ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

கலப்பு நிறமுள்ளதான் பலத்த குட்டிகளை லாபனுடைய மந்தைக்கு எதிராக நிற்கும் படியாக தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. இதனால் யாக்கோபு விருத்தியடைந்தார்  திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், சொந்தக்காரரானார். கர்த்தர் லாபனுடைய மந்தைக்கும் யாக்கோபினுடைய மந்தைக்கும் கர்த்தர் ஒரு வித்தியாசத்தை உண்டுப்பண்ணினார். இன்றைக்கு உங்கள் கையிலே கொஞ்சம் தான் இருக்கிறதா கவலை வேண்டாம் அதை வர்த்திக்க பண்ணும்படியாக தேவனிடத்தில் கேளுங்கள் யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்தது போலவே உங்கள் சம்பாத்யத்தையும் கர்த்தர் பெறுக செய்து நிறைவாய் ஆசீர்வதிப்பார். உங்களுக்கும் மற்றவர்களுக்கு வித்தியாசம் காணும்படியாக கர்த்தர் ஆசீர்வதிப்பார். 

2. பாதுகாப்பிலே ஒரு வித்தியாசம் - இயேசுவின் இரத்தம் உன்னை காக்கும் 

யாத்திராகமம் 11:1 - 7

யாத்திராகமம் 11:7
ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

கர்த்தர் தம்முடைய ஜனங்கள் ஆராதனை செய்ய போகிவிடும் படி மோசேயிடம் சொல்லி பார்வோனிடம் சொல்லச்சொன்னார். ஆனால் பார்வோனின் இருதயம் கடினமானதால் அவன் இஸ்ரவேல் ஜனங்களை மிகவும் நெருங்கினான். அதனால் கர்த்தர் எகிப்த்தின் மீது வாதைகளை வரப்பண்ணினார். இந்த வாதைகள் ஏதும் இஸ்ரவேல் ஜனங்களை அணுகவில்லை இதன் மூலம் எகிப்தின் ஜனங்களுக்கும் தம் ஜனங்களுக்கும் ஒரு வித்தியாசத்தை கர்த்தர் காணும்படியாக செய்தார். கர்த்தர் வரப்பண்ணும் வதைக்கும் சிங்காசனத்தில் இருக்கும் பார்வோனின் தலைப்பிள்ளையும் தப்பிக்காது, ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளையும் தப்பிக்காது என்று மோசேயின் மூலம் பார்வோனை எச்சரித்தார். பார்வோன் கர்த்தருடைய வல்லமையை அறிந்து கொள்ள வேண்டும், கர்த்தர் இஸ்ரவேலுக்கும், எகிப்தியருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை பார்வோன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார். அதே நேரத்தில் வாதை கடந்து போகும் பொழுது இஸ்ரவேல் புத்திரர் வீட்டின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட இரத்தம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது எகிப்திலோ மகா கூக்குரல் உண்டாயிற்று ஆம் பிரியமானவர்களே இந்த கொடிய கொள்ளை நோயின் காலத்திலும் கர்த்தர் நம்மை பாதுகாத்தார். அநேக ஆளுகை உள்ளவர்கள், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், தலைவர்கள் என அனைவரும் மரணத்தை சந்தித்தார்கள் ஆனால் நம்மையோ தேவனுடைய விலையேறப்பெற்ற திருஇரத்தம் இந்நாள் வரையும் நமக்கு பாதுகாப்பாய் இருக்கிறது . 

3. வாலிபர்களுக்குள்ளே ஒரு வித்தியாசம் - உன் ஆவிக்குரிய ஜீவியம் வளர்ச்சியடையும் 

தானியேல் 1: 3 - 15

தானியேல் 1:15
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

தானியேல் 1:16
ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

தானியேல் 1:17
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

தானியேலோடு மேலும் சில எபிரேய வாலிபர்களும் பாபிலோன் சிறையிருப்புக்கு போகிறார்கள். அவர்கள் அங்கே  கல்தேயரின் அரசாங்கத்தில் வேலை செய்ய எதுவாக அவர்களுக்கு கல்தேயரின்  எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். ராஜபோஜனத்தில் ஒரு பங்கு அவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்தது. தானியேல் ராஜாவின் போஜனதாலும், திராட்சை இரசத்தாலும் தன்னை தீட்டுப்படுத்தலாகாது என்று இருதயத்திலே தீர்மானம் பண்ணிக்கொண்டு எங்களுக்கு புசிக்க பருப்பு முதலான மரக்கறியும், தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். அவர்கள் பத்து நாள் அளவும் அவ்வாறு கொடுக்க செய்தார்கள். ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. இதனால் தேவன் அவர்களை சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்து ஆசீர்வதித்தார். தானியேலுக்கு சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அதே போல நாமும் இந்த உலக காரியங்களில் இருந்து நம் இருதயத்தை தீட்டுப்படுத்தாமல் தேவனுக்கென்று வைராக்யமாய் இருப்போம் என்று சொன்னால் தேவன் உங்களை பொலிவாக, மற்றவர்களுக்கு வெளிச்சமாகவும் இருக்கும்படியாக செய்து வரங்களால் உங்களை நிரப்பி ஆசீர்வதிப்பார். 

4. வீரர்களிலே ஒரு வித்தியாசம் - உன்னை இரட்சித்து வெற்றியை கொடுக்கும் 

நியாயாதிபதிகள் 7:2 - 21

நியாயாதிபதிகள் 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

நியாயாதிபதிகள் 7:16
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

நியாயாதிபதிகள் 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

நியாயாதிபதிகள் 7:21
பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு அது இடமாக இருக்கும் என்று எண்ணி பயமும் திகிலும் உள்ளவர்கள் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் சொன்னார். இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய் பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள். கர்த்தர் இவர்கள் இன்னும் அதிகம் எனவே அவர்களை தண்ணீர்களண்டைக்கு கொண்டு போக சொல்கிறார். தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்தும்படியாக சொல்கிறார். தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர் இருந்தார்கள். கர்த்தர் அவர்களை கொண்டு மீதியானியர் கையில் இருந்து உங்களை இரட்சிப்பேன் என்று சொன்னார். கிதியோன் அந்த முன்னூறு பேரை மூன்று படியாக வகுத்து அவர்கள் கையிலே எக்காளத்தையும், பாணையையும் அதற்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்தார். கிதியோனின் மூன்று படைகளும் பாளையத்தை சுற்றிலும் இருந்து எக்காலங்களை ஊதி பானைகளை உடைத்து கர்த்தருடைய பட்டயம், கிதியோனின் பட்டயம் என்று சொன்னார்கள். அப்பொழுது பாளையத்தில் இருந்தவர்கள் எல்லாம் சிதறி ஓடும் படியாக கர்த்தர் செய்தார். உங்களுக்குள் இருக்கிற மாமிசமான காரியங்கள் நாம் உடைத்துப்போட வேண்டும். தேவனுடைய சித்தமும், அவருடைய திட்டம் மாத்திரமே உங்களுக்குள் இருக்க வேண்டும், எப்பொழுதும் தேவனுக்கு முன்பதாக அக்கினி ஜிவாலைகளாக அவருடைய சமூகத்தில் காணப்படவேண்டும் அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு வெற்றியை தந்து இரட்சிப்பார். 

5. ஜனங்களுக்குள்ளே ஒரு வித்தியாசம் - உன்னை ஆசீர்வதிக்கும் 

எண்ணாகமம் 23:4 - 12

எண்ணாகமம் 23:9
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

எண்ணாகமம் 23:10
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

எண்ணாகமம் 23:11
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

எண்ணாகமம் 23:12
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.

யார் இந்த பிலேயாம் கர்த்தருடைய வார்த்தையை சொல்லுகிற தீர்க்கதரிசி, திரளான ஜனங்கள் அந்த தேசத்தை மூடினார்கள், இந்த ஜனங்களின் இலக்கம் அதிகமாய் இருக்கிறது. எனவே பாலாக் பிலேயாமை சந்தித்து நீங்கள் யாக்கோபை சபிக்க வேண்டும் என்று கூறினான். கர்த்தர் பிலேயாமிடம் இவ்வாறாக சொல்லுகிறார்  தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். இந்த ஜனங்களுக்காக கர்த்தர் நின்றார் ஏன் என்றால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம். அவர்களை நான் எப்படி, சபிப்பேன், எப்படி வெறுப்பேன், எப்படி கைவிடுவேன் எனச்சொல்லி கர்த்தர் பிலேயாமின் வாயிலே வார்த்தையை வைத்து இஸ்ரவேல் ஜனங்களை பாகாலுக்கு முன்பதாக அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தார். ஆம் பிரியமானவர்களே நாம் சபிக்கப்பட்ட ஜனம் அல்ல, மறக்கப்பட்ட ஜனம் அல்ல நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம், நம்மை கர்த்தர் தனெக்கென்று ஏற்படுத்தி இருக்கிறார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே அவருக்கு பிரியம். எல்லா ஜாதிகளுக்கு முன்பதாக கர்த்தர் உங்கள் பேரை பெருமைப்படுத்தி ஒரு வித்தியாசத்தை காணச்செய்வார். 








Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment