Monday, July 19, 2021

கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று

 

Kanmalai Christian Church

Word of God: Brother Kamal

Date:18.07.2021


I இராஜாக்கள் 8:11
மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

II நாளாகமம் 7:1
சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

II நாளாகமம் 7:2
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

II நாளாகமம் 7:3
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.

சாலோமோன் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வரும்படியாக இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும் தன்னிடமாய் கூடிவர செய்தார். இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் வந்திருக்கையில், ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை எடுத்து, பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்து கொண்டு வந்தார்கள். ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள். ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியை மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைத்து விட்டு புறப்படுகையில் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது.  

கர்த்தருடைய மகைமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. இன்றைக்கு நாமே கர்த்தருடைய ஆலயமாக இருக்கிறோம். அன்றைக்கு சாலமோன் கட்டின ஆலயத்தை நிரப்பிய கர்த்தருடைய மகிமையானது அவர் வசிக்கும் ஆலயமாகிய நம்மையும் இன்றைக்கு நிரப்பப்போகிறது. இன்றைக்கு தேவன் நமக்கு எப்படிப்பட்ட மகிமையாய் நமக்கு இருப்பார் என்பதை வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம். 

சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

1. மகிமைபொருந்திய பட்டயமாய் இருந்து சத்துருக்களை ஒப்புக்கொடுப்பார் 

உபாகமம் 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

உபாகமம் 33:28
இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

நியாயாதிபதிகள் 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

நியாயாதிபதிகள் 7:21
பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

நியாயாதிபதிகள் 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.

ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கு தேவன் சகாயம் செய்யும் கேடகமாகவும், மகிமை பொருந்திய பட்டயமாகவும் இருக்கப்போகிறார். நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம் அவர் முன் நின்று உங்கள் சத்துருக்களை துரத்துவார். கர்த்தர் கிதியோனுக்கு பட்டயமாக இருந்து வெறும் முன்னூறு பேரை கொண்டு மீதியானியரை அவர்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அதே போல தேவன் இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில் அவர் மகிமை பொருந்திய பட்டயமாக இருந்து உங்களுக்கு விரோதமாக எழுப்புகிற எல்லா சத்துருக்களையும் அவர் துரத்துவார். 

2. மகிமையான சிங்காசனத்தை அளித்து உயர்ந்த அடைகாலத்திலே வைப்பார் 

I சாமுவேல் 2:7
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

I சாமுவேல் 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

சங்கீதம் 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.

சங்கீதம் 113:7
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

சங்கீதம் 113:8
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

சங்கீதம் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

அன்னாளுடைய கர்த்தர் அடைத்து இருந்ததினால் பென்னினாள் அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். வருஷம்தோறும் இவள் அவளை மனமடிவாக்குவாள். எனவே அன்னாள் கர்த்தருடைய சமூகத்தில் மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தாள். அவர் சமூகத்திலே அவள் இருதயத்தை ஊற்றி ஜெபித்தாள். உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் தந்து அன்னாளுக்கு சாமுவேலை பிள்ளையாக கொடுத்து ஆசீர்வதித்தார். அப்பொழுது அன்னாள் ஜெபம் செய்யும் பொழுது என் இதயம் களிகூருகின்றது, என் கொம்பு என் பகைவர்களுக்கு முன்பதாக உயர்ந்து இருக்கிறது கர்த்தர் சிரியவரை புழுதியில் இருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்க செய்கிறார். இராஜாக்களோடும், பிரபுக்களோடும் உடாகிறவைக்கிறார் என்று நாம் இங்கே வாசிக்கிறோம்.

அதே போல இன்றைக்கு அன்னாளை போல உங்களை துக்கப்படுத்தி, மனமடிவாக்கி, அற்பமாய் எண்ணுகிற ஜனங்களின் கண்களுக்கு முன்பதாக தேவன் உங்களை உயர்த்தி மகிமையான சிங்காசனத்தில் அமரவைப்பார். உங்களை கொம்பை அவர்களுக்கு முன்பாக உயரப்பண்ணி உங்களை களிகூறச்செய்வார். உங்களை உயர்ந்த அடைகாலத்திலே வைப்பார். 

3. ஞானத்தை அளித்து மகிமையான ஐசுவரியத்தினால் நிரப்புவார் 

I இராஜாக்கள் 3:8
நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

I இராஜாக்கள் 3:9
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

I இராஜாக்கள் 3:10
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

I இராஜாக்கள் 3:11
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,

I இராஜாக்கள் 3:12
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

I இராஜாக்கள் 3:13
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

கிபியோனிலே கர்த்தர் சாலமோனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறார். அதற்கு சாலமோன் எண்ணிக்கைக்கு அடங்காத இலக்கமாய் இந்த ஜனங்களை நியாயம் விசாரிக்க ஞானமுள்ள இருதயத்தை எனக்கு தந்தருளும் என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டது கர்த்தருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாக இருந்தது எனவே கர்த்தர் சாலமோன் கேட்காத ஐசுவரியத்தையும். மகிமையும் தந்தருளினார். 

நீதிமொழிகள் 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

ஐசுவரியமும் கனமும் கர்த்தராலே மாத்திரம் வருகிறது. கர்த்தருடைய ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தரும். எவரையும் மேன்மைப்படுத்த கர்த்தருடைய கரத்தினால் ஆகும். கர்த்தருக்கு பயந்து நடப்பதே ஐசுவரியமும், மகிமையும் என்று நாம் வாசிக்கிறோம் ஆம் கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. இதை பிற்பாடு சாலமோன் ராஜ பின்பற்றவில்லை. கர்த்தருக்கு பயந்து நடக்க தவறிவிட்டார். எனவேதான் தேவன் உன் ராஜ்யபாரத்தை பிடுங்கி உன் ஊழியக்காரருக்கு கொடுப்பேன் என்றும் தாவீதின் நிமித்தமாக அதை நீ மரிக்கும் வரையில் செய்யமாட்டேன் என்று கர்த்தர் சொன்னார். 

மகிமையின் ஐசுவரியம் இவற்றின் இரகசியம் இன்னதென்று அப்போஸ்தலராகிய பவுல் தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார். 

கொலோசெயர் 1:27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

கொலோசெயர் 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதே மகிமையின் ஐசுவரியத்தின் இரகசியம் என் பவுல் இவ்வாறாக சொல்லுகிறார். இன்றைக்கு தேவ ஞானத்தை நாம் வாஞ்சித்து கேட்கும் பொழுது தேவன் நமக்கு கேளாத ஐசுவரியத்தின் மகிமையை தந்தருளுவார். கிறிஸ்துவானவர் நமக்குள் இருப்பதால் எந்த மனுஷனையும்  கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு இயேசுவை அறிவித்து எந்த மனுஷரையும் புத்தி சொல்லி நடத்த இந்த ஞானம் நமக்கு உதவியாக இருக்கும்.  

4. மகிமையின் புயமாய் இருந்து உங்களை வழிநடத்துவார்

ஏசாயா 63:12
அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,

ஏசாயா 63:13
ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?

ஏசாயா 63:14
கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை தமது மகிமையின் புயத்தினால் வழிநடத்தினார். ஒரு குதிரை வனாந்திரத்தில் இடறல் இல்லாமல் போவது போல அவர்களை ஆழங்களில் கடக்கப்பண்ணினார். பள்ளத்தாக்கிலே இறங்குகிற மிருகஜீவன்களை போல கர்த்தர் அவர்களை இளைப்பாற பண்ணினார் அது போலவே நம்மையும் தேவன் தாமே தமது மகிமையின் புயத்தினால் வழிநடத்தி செழிப்பான பள்ளத்தாக்கில் இளைப்பாற செய்வார். 

5. மகிமையின் அறிவாகிய வெளிச்சத்தை அளித்து கிருபையும், சமாதானத்தையும் பெறுக வைப்பார் 

II கொரிந்தியர் 4:4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

II கொரிந்தியர் 4:5
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.

II கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

II பேதுரு 1:2
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.

தேவனின் மகிமையின் அறிவாகிய ஒளியை நாம் காணும்படியாக அவர் நம் இருதயங்களிலே பிரகாசித்தார். அவர் நமக்கு தந்து இருக்கிற அபிஷேகம், ஆசீர்வாதங்கள், அதிகாரங்கள், வரங்கள், தாலந்துகள் ஆகியவற்றை நம்முடைய சொந்த கண்களால் கண்டு நாம் அவற்றை சுதந்தரித்து அனுபவிக்கிறதற்கு தேவன் நம்முடைய இருதயங்களிலே பிரகாசித்தார். மகிமையின் அறிவாகிய ஒளியை நாம் காணும்படியாக அவர் நமக்குள்ளே பிரகாசித்தார். தேவனை அறிகிற அறிவுதான் நமக்கு இன்றைக்கு தேவை, தேவனை அறிகிற அறிவினால் நமக்கு கிருபையும், சமாதானமும் உண்டாகிறது. எனவே தேவனை அறிகிற அறிவிலே வளர்வோம் கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களிலே பிரகாசிப்பார்.








For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment