Sunday, February 27, 2022

உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 27.02.2022


மத்தேயு 20:26
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

நம் எல்லோரிடமும் பணிவிடையின் ஆவி இருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் வாழும் சமூகத்திலே பெரியவனாக இருக்க விரும்பினால் அதற்கு நீங்கள் பணிவிடைக்காரராய் இருக்க வேண்டும். சிறியோருக்கும், பெரியாருக்கும் பாரபட்சம் இன்றி பணிவிடைக்காரராய் மாற வேண்டும் அப்பொழுது கர்த்தர் உங்களை வாலாக்காமல், தலையாக்குவார். 

1. வீட்டிலே உண்மையாய் பணிவிடை செய்ய வேண்டும் 

எபிரெயர் 3:5
சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.

யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

யாத்திராகமம் 4:12
ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

யாத்திராகமம் 4:13
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.

மோசே அவருடைய வீட்டிலே பணிவிடைக்காரராய் எல்லா இடங்களிலும் உண்மை உள்ளவராக இருந்தார்,  மோசே பார்வோன் வீட்டலேயும் உண்மையுள்ளவராய் இருந்தார். அவருடைய மாமன் வீட்டலேயும் நாற்பது வருடங்கள் உண்மையுள்ளவராய் இருந்தார். அது போல வீட்டில் பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்கிற காரியங்களை அவர்களுக்கு கீழ்ப்படிந்து செய்து வீட்டிலே உண்மையாய் பணிவிடை செய்ய வேண்டும். வீட்டிலே உங்களுக்கு நியமிக்கப்படும் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அந்த காரியத்தை வேறு ஒருவரிடம் கொடுக்க கூடாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை பணிவிடைக்காரனாய் நீங்கள் தான் செய்து முடிக்க வேண்டும். கடினமான உழைப்பை செய்கிறவர்களை கர்த்தர் கைவிடவே மாட்டார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை படைத்தலைவராக மாற்றினார்,அதுபோல நீங்கள் உண்மையாய் வீட்டிலே பணிவிடை செய்யும் பொழுது கர்த்தர் உங்களை உயர்த்துவார். 

2. பரிசுத்த ஆவி நிறைவோடு சபை ஜனங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் 

 அப்போஸ்தலர் 6:2
அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.

அப்போஸ்தலர் 6:3
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

அப்போஸ்தலர் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

அப்போஸ்தலர் 6:5
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

அப்போஸ்தலர் 6:6
அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

அப்போஸ்தலர் 6:7
தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

அப்போஸ்தலர் 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

இங்கே சபை மக்களுக்கு பணிவிடை செய்ய மூன்று விதமான காரியங்கள் காணப்படவேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்று இருக்கிறவர்களை சபை ஜனங்களுக்கு பணிவிடை செய்ய தெரிந்து கொண்டார்கள். பணிவிடைக்காரராய் தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்தேவான் விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவராய் காணப்பட்டு ஜனங்களுக்கு பணிவிடை செய்தார். விசுவாசத்தினால், வல்லமையினால் நிறைந்தவராய் இருந்த ஸ்தேவான் தன் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். அதே போல நாமும் பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்று சபையிலே பணிவிடை செய்ய வேண்டும். அப்பொழுது உங்கள் மூலமாக கர்த்தர் பெரிய அறுபுத்தங்களையும், அடையாளங்களையும் செய்வார். 

3. ஆசரிப்பு கூடாரத்தை (ஆலயத்தை) விட்டு பிரியாது பணிவிடை செய்ய வேண்டும் 

யாத்திராகமம் 33:10
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.

யாத்திராகமம் 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

கர்த்தருக்கு பணிவிடை செய்வதிலே வாலிபர்கள் அதிகமாய் ஈடுபடவேண்டும். இங்கே யோசுவா ஆசரிப்பு கூடாரத்தை வித்து பிரியாது இருந்தார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது அதுபோல வாலிபர்கள் சபையோடும், சபை ஐக்கியத்தில் ஒன்றி எப்பொழுதும் பிரியாது பணிவிடை செய்ய வேண்டும். ஆசரிப்பு கூடாரத்தை விட்டு வாலிபர்கள் பிரியாது இருக்க வேண்டும். ஏன் கர்த்தர் யோசுவாவை கர்த்தர் ஆசரிப்பு கூடாரத்திற்கு பணிவிடைக்காரராய் தெரிந்து கொண்டார் என்றால் யோசுவா கடினமாக உழைக்கிறவராக காணப்பட்டார். அதனால் தான் கர்த்தர் அந்த அழைப்பை கொடுத்து எப்படி மோசேயோடு முகமுகமாய் பேசினாரா அதேபோல யோசுவாவோடும் கர்த்தர் பேசினார். இஸ்ரவேல் ஜனத்திற்கும், படைக்கும் கர்த்தர் அதிபதியாக யோசுவாவை தெரிந்து கொண்டார் ஏன் என்றால் அவர் ஆசரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாது பணிவிடை செய்தார். இன்றைக்கு நாமும் யோசுவாவைப்போல நம்முடைய ஆலயத்திற்கு பணிவிடை செய்யும்பொழுது கர்த்தர் உங்களை அதிபதியாக மாற்றுவார். 

4. கர்த்தருக்கும், ஆசாரியருக்கும் பணிவிடை செய்ய வேண்டும் 

I சாமுவேல் 3:1
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

I சாமுவேல் 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருக்கும், ஆசாரியருக்கும் பணிவிடை செய்து கொண்டு இருந்தார்.  நாம் கர்த்தருடைய ஊழிய காரருக்கு பணிவிடை செய்யும் பொழுது அது நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்கே பணிவிடை செய்வது போன்றது ஆகும். ஆகவே நாம் சபையிலே கர்த்தருக்கென்று ஆசாரியர் சொல்கிற காரியத்திற்கு கீழ்ப்படிந்து பணிவிடை செய்ய வேண்டும். கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்த சாமுவேல் பிள்ளையாண்டானுக்கு கர்த்தருடைய சத்தம் கேட்டது, சாமுவேலை போல கடினமாக பணிவிடை செய்து ஊழிக்கும்பொழுது கர்த்தர் உங்களையும் தீர்க்கதரிசியாய் தெரிந்துக்கொண்டு உங்களை பயன்படுத்துவார். 

5. இயேசு பணிவிடை செய்தது போல நாமும் பிறருக்கு பணிவிடைக்காரராய் இருக்க வேண்டும் 

லூக்கா 22:25
அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.

லூக்கா 22:26
உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

லூக்கா 22:27
பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.

இங்கே இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பிறருக்கு ஊழியம் செய்வதற்க்கு பதிலாக ஊழியம் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். ஆகையினால் தான் அவருக்குள்ளே எவன் பெரியவன் என்ற வாக்குவாதம் எழுந்தது இதை அறிந்த இயேசு அவர்களிடத்தில் பணிவிடை செய்கிற ஊழியத்தை பற்றி அழகாக ஆலோசனை கூறுகிறார். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். என்று சொல்லுகிறார், பெரியவனாக இருக்க வேண்டும் என்று விருப்புகிறவர்கள் முதலில் பிறருக்கு பணிவிடை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். தம்முடைய சீஷர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார், அதற்கு உதாரணமாக இயேசு தன்னையே குறிப்பிட்டு சொன்னார், இயேசு அவர்களுக்கு பெரியவராக இருந்தாலும் சீஷர்கள் மத்தியில் தானும் ஒரு பணிவிடைக்காரனைப்போல இருக்கிறேன் என்று தம் சீஷர்களுக்கு விளக்கினார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஒரு பணிவிடைக்காரன் போல பணிவிடை செய்ததினாலே தான் அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவர் பெற்றுக்கொண்டார் நாம் எல்லாம் எம்மாத்திரம் ஆகவே கிறிஸ்துவை பின்பற்றுகிற சீஷராக இருக்கிற நாமும் பணிவிடைக்காரர்போல பிறருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தமாய்  உள்ளது. 









For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment