Sunday, May 1, 2022

என் பிரியமே நீ பூரண ரூபவதி உன்னில் பழுதொன்றுமில்லை

 

கன்மலை கிறிஸ்துவ சபை மே மாத வாக்குத்தத்தம் 

Word of God: Brother Micheal

Date: 01.05.2022

உன்னதப்பாட்டு 4:7

என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.

என் பிரியமே என் பூரண ரூபவதியே உன்னில் பழுது ஒன்றும் இல்லை என்று கர்த்தர் இந்த மே மாதம் உங்களுக்கு திருவுளம்பற்றுகிறார்.  கர்த்தர் இந்த மாதம் நமக்கு பூரணமாய் செய்யப்போகிற ஐந்து  விதமான காரியங்களை வேதத்தை அடிப்படையாக நாம் இங்கே தியானிக்கலாம். 

1. சந்தேகத்தை நீக்கி - பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார் 

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

ஏசாயா 26:4

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

யோவான் 20:26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:27

பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

யோவான் 20:28

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

யோவான் 20:29

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

கர்த்தர் தம்முடைய மணவாட்டியாகிய உங்களை பார்த்து சொல்கிறதாவது அவர் உங்களை இந்த மே மாதம் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். நீங்கள் அவரை உறுதியாய் பற்றி கொண்டு இருப்பதினால் அவர் நித்திய கன்மலையாக உங்களோடு கூட இருப்பார். இயேசு சிலுவையிலே மரித்த பின்பு அவர் மீண்டும் உய்ரித்தெழுவார் என்பதை விசுவாசியாமல் சமாதானம் இல்லாமல் எங்கே நம்மையும் கொன்று விடுவார்களோ என்று சீஷர்கள் பூட்டிய வீட்டின் உள்ளே இருந்தார்கள் அப்பொழுது இயேசு அவர்களின் முன்பாக தோன்றி உங்களுக்கு சமாதானம் என்கிறார். தோமா என்ற சீஷர் நான் இயேசுவின் கைகளின் காயங்களில் என் விரலை போட்டு பார்க்கும் நான் விசுவாசிக்க மாட்டேன் என்கிறார் அங்கு மறுபடியும் இயேசு தோன்றி தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். அதற்கு இயேசு நீயோ என்னை கண்டதினால் விசுவாசிக்கிறாய் ஆனால் காணாமல் என்னை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு கூறினார். ஆம் பிரியமான தேவ ஜனமே நாம் அவர் காணாமல் விசுவாசிப்பதால் நாம் கர்த்தருடைய பார்வையில் பாக்யவான்களாய் இருக்கிறோம். இந்த மாதம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் கடக்க நேரிட்டாலும் சரி நாம் சந்தேகப்படாமல் கர்த்தரை மாத்திரம் நம்பியிருப்போம் என்று சொன்னால் அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறார்.  

2. அதிசயமாய் நடத்தி - களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார் 

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

நீதிமொழிகள் 3:8
அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

நீதிமொழிகள் 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

நீதிமொழிகள் 3:10
அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

யோவேல் 2:23
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

யோவேல் 2:24
களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.

யோவேல் 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

கர்த்தர் இந்த மாதம் நம்முடைய களஞ்சியங்களை எல்லாம் பூரணமாய் நிரம்பும்படியாக செய்வார். நாம் தவறுகள் செய்து இருந்தாலும் நம் தேவன் நமக்காக பார்த்தவிக்கிற தேவனாய் இருக்கிறார். அவர் உங்களுக்காய் பரிந்து பேசி நித்தமும் உங்கள் களஞ்சியங்களை பூரணமாய் நிரம்பிட செய்வார். இந்த மாதம் நீங்கள் சம்பூரணமாய் சாப்பிட்டு திருப்தியாவீர்கள். அதிசயமாக இந்த மாதம் கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார். 

3. பலப்படுத்துவார் - அவர் பலம் உன்னுள் பூரணமாய் விளங்கும் 

II கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

லூக்கா 22:42
பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

லூக்கா 22:43
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

உங்களை அடிக்கடி பெலவீன படுத்துகிற, இருதயத்தை சஞ்சலப்படுத்துகிற எல்லா போராட்டத்தின் மத்தியிலும் கர்த்தர் சொல்லுகிறதாவது இந்த மாதம் உங்கள் பெலவீனத்தில் கர்த்தருடைய பலம் பூரணமாய் விளங்கும். எதையும் தாங்கக்கூடிய கிருபையை, போராட்டங்களை சகித்து கொள்ளும் கிருபையை கர்த்தர் பூரணமாய் அளிப்பார். இயேசு கிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கி போகும் படி செய்யும் ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் செய்தார். அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தூதன் வந்து இயேசுவை பெலப்படுத்தினான் என்று நாம் வாசிக்கிறோம். அதேபோல உங்களையும் இந்த மாதம் உங்களை பெலப்படுத்தும் படியாக கர்த்தர் தன்னுடைய பலத்தை உங்களுக்கு அளித்து வழிநடத்துவார்.

4. சஞ்சலத்தை நீக்கி - ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவார் 

யாத்திராகமம் 23:26
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

ஆதியாகமம் 48:2
இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.

ஆதியாகமம் 48:11
இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.

ஆதியாகமம் 49:33
யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

நம்முடைய ஆயுசுநாட்களை பூரணப்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மரிக்கும் பொழுது நாம் பூரணமாய் மரிக்க வேண்டும் அப்படி பட்ட கிருபையை கர்த்தர் யாக்கோபுக்கு அளித்திருந்தார்.  யாக்கோபுக்கு ஒரு வருத்தம் இருந்து இருக்கிறது தன்னுடைய குமாரனான யாக்கோபை காண முடியாமல் போய் விடுவோமோ என்று அனால் யோசேப்பை காணும் படியாக கர்த்தர் கிருபை செய்தார். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி உன்னை காண முடியுமோ என்று நான் நினைக்கவில்லை ஆனால் கர்த்தர் உன்னையும் உன் சந்ததியையும் காணும்படியாக கர்த்தர் அருள்புரிந்தார் என்றார். இப்படியாக கர்த்தர் யாக்கோபின் ஆயுசுநாட்களை பூரணப்படுத்தினார் அதேபோல உங்களுடைய ஆயுசுநாட்களையும் கர்த்தர் பூரணப்படுத்துவார். 

5. சோர்வை நீக்கி - பூரணமான ஆகாரத்தை அளித்து திருப்தியாக்குவார் 

சங்கீதம் 78:25
தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.

மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

மத்தேயு 14:20
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். சாயங்காலம் ஆனபொழுது சீஷர்கள் இயேசுவினடத்தில் வந்து இது வானாந்திரமான இடமாய் இருக்கிறது வெகு நேரம் ஆகி விட்டது ஆகையால் அவர் தங்கள் போஜனங்களை கொள்ளும்படியாக அவர்களை போகிவிடும் என்று இயேசுவிடம் கூறினார்கள். அதற்கு இயேசு அவர் போக வேண்டுவதில்லை நீங்களே அவர்களுக்கு போஜனம் கொடுங்கள் என்றார். எங்களிடம் ஐந்து அப்பம் இரண்டு மீன்களை தவிர வேறு எதுவும் இல்லை என்றனர் இயேசு அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொல்லி வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அதேபோல எப்படிப்பட்ட வானாந்திரமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி சோறுந்துபோக வேண்டாம். உங்களுக்கு பூரணமான ஆகாரத்தை அளித்து போஷிக்க இயேசுவால் முடியும். தேவனால் எல்லாம் கூடும் கர்த்தர் உங்களை இந்த மாதம் பூரணமாய் போஷிப்பார். 





Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment